13வது யாப்புச் சீர்திருத்தத்தின் மீது ஏதேனும் மாற்றங்கள் நிகழுமாயின் வீதிக்கு இறங்கி போராடுவேன்.வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

நீலமேகம் பிரசாந்த்


இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சந்தாப்பண அறவீடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.அட்டைக் கடிக்கும்,குளவிக் கூட்டிற்கு பலியாகியும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அப்பாவி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் எதுவித ஊழல்கள்,மோசடிகள் இடம்பெற அனுமதிக்கமாட்டேன்".என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

09.09.2020 கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இவ் வேளை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"அப்பாவி மக்களான பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்கும்,தங்களது சுயலாப நோக்குகளை அடைவதற்கும் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் மலையகத்தில் இன்றும்  தேங்கியுள்ள நிலையில்,தற்போது இப் புதிய 20வது யாப்புத் திருத்த சட்டம் நாட்டுக்கும் இந் நாட்டின் மக்களுக்கும் தேவையா?? என்பதே மக்கள் மத்தியில் எழும் பெரும் கேள்வியாக உள்ளது.

காரணம் பெருந்தோட்ட மக்களின் 1000 /=  சம்பளஉயர்வு,வீடமைப்புத்திட்டம்,உட்கட்டமைப்பு வசதி என பல வாக்குறுதிகளை அளித்து இப் புதிய அரசாங்கம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தங்களது குடும்ப ஆட்சியை சக்திமயப்படுத்துவதும்,அரசியல் வங்குரோத்து நிலைமைகளை தக்கவைத்துக் கொள்வதற்குமான நிலையிலுமே அவர்களது சுயநலத்திற்காக இவ் 20வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எது எவ்வாறாயினும் இப் புதிய அரசியலமைப்பு யாப்பு திருத்தத்திற்கு மலையக மக்களின் சிறுபான்மை பிரதிநிதி என்றவகையிலும் பெருந்தோட்ட மக்களின் காவலன் என்ற ரீதியிலும் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை.அத்தோடு 13வது யாப்புச் சீர்திருத்தத்தின் மீது ஏதேனும் மாற்றங்கள் நிகழுமாயின்,ஒட்டு மொத்த மலையக மற்றும்  வடக்கு,கிழக்கு சிறுபான்மை மக்கள் அனைவரும் இணைந்து  வீதிக்கு இறங்கி போராடுவோம்.

நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய வகையிலும்,மக்களின் வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்க வேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ள போதிலும் அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு,ஏற்றுமதி,இறக்குமதிகளை தடை செய்து பொருளாதாரத்தை பின்தள்ளியுள்ளது.இவ் அரசாங்கம்.

மக்கள் தங்களது வாக்குகளை அளித்து எம்மை பாராளுமன்றம் அனுப்பியது மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பெறுவதற்கும் நிலைபெறச்செய்வதற்கும் மாத்திரமே.அதனை நினைவில் கொண்டே எம் சேவைகளை தொடர வேண்டும்.தத்தமது சுயலாபங்களை அடைவதற்கு பல வழிகள் உள்ளது.அதைவிடுத்து மக்களின் சேவகன் எனும் பெயரில் அராஜாகமும், அட்டூழியத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.இதே செயற்பாடு தான் தற்போது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக்காரியாலயமான ராஜகிரிய தொழிலாளர் இல்லத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது.அப்பாவி தோட்டத் தொழிலாளிகளின் சந்தாப் பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அடியாட்களுக்கு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.கோவில் போன்ற ஓர் தூய்மையான காரியாலயத்தை மதுபானங்கள்,போதைப் பொருட்கள் போன்றவற்றால் கலங்கப்படுத்தியுள்ளனர். 

இனியும் ஒரு போதும் நாம் பொறுமை காத்து நிற்கப் போவதில்லை.இன்றும் நீதிமன்ற உத்தரவின் படி இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ பொதுச் செயலாளர் நானே.ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்களிடம் பொறுப்பாக கூறிக் கொள்வது ஒன்று மட்டுமே.உடனடியாக சந்தாப் பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும்.அப்பாவி மக்களின் சந்தாப் பணத்தை களவாடுவதற்கும் அநீதியான வழியில் செலவு செய்வதற்கும் ஒரு போதும் அனுமதியளிக்கப் போவதில்லை.என தெரிவித்தார்.

No comments: