போலி நோட்டுடன் இருவர் கைது

 (க.கிஷாந்தன்)

எரிபொருள் நிலையமொன்றில் போலி ஐயாயிரம் ரூபா நோட்டினைக் கொடுத்த இரு இளைஞர்களை, பதுளை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளதோடு, குறிப்பிட்ட போலி நோட்டினையும் மீட்டனர்.

எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஹெலஹல்ப்பே எரிபொருள் நிலையத்தில், மோட்டார் சைக்கிளொன்றிற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு, அம் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தம்மிடமிருந்த ஐயாயிரம் ரூபா நோட்டினை எரிபொருள் நிலையத்திற்கு வழங்கினர்.

பண நோட்டினைப் பெற்ற எரிபொருள் நிலையத்தினர், அந் நோட்டில் மாற்றமொன்றினைக் கண்டு, அது குறித்து எல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் பண நோட்டினை பரிசீலனை செய்த போது, அப் பண நோட்டு போலி நோட்டென்பதை உறுதிப்படுத்தி, அந் நோட்டினை வழங்கிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவ்விருவரும், விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே.எம். அலகியவன்ன தெரிவித்தார்.

No comments: