பஸ் விபத்து - ஐவர் காயம்

 (க.கிஷாந்தன்)

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் துறைசார் பஸ் ஒன்று, வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில், குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பிரயாணிகள் ஐவர் கடுங் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ் விபத்து, இன்று பண்டாரவளை ஹல்துமுள்ளை நகரில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து கடுங்காயங்களுக்குள்ளானவர்களில் நான்கு பேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையிலும், மற்றவர் ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமுற்ற ஐவரும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்தவர்களாவர். பஸ் மோதிய வீட்டில் எவரும் இல்லாதலால், எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், குறிப்பிட்ட வீட்டிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பஸ்ஸின் வேகம் கட்டுப்படுத்தப்படாதலாலேயே, இவ் விபத்து இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர். ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா தலைமையிலான குழுவினர் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விபத்தில் காயமுற்றவர்களில் பெண்கள் மூவரும், ஒரு ஆணும், ஒரு சிறுவனும் அடங்கியுள்ளனர். இவர்களில் மூன்று பெண்களும், ஒரு சிறுவனும் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையிலும், ஒருவர் ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: