மட்டக்களப்பு நகரில் தங்க நகை கடை கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது

 --கனகராசா சரவணன்--

மட்டக்களப்பு நகரில் பிரபல தங்க நகை கடை உடைத்து 8 கிலோ கொண்ட 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளை தொடர்பாக குறித்த கடையில் பணியாற்றிய முகாமையாளர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்ததுடன் மேலும் 88 கிராம் 400 மில்லிக்கிராம் 2 இலச்சத்து 38 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தங்க நகைக் கடை கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து அதில் இருந்த 10 கோடி ரூபா பெறுமதியான சுமார் 8 கிலோ தங்க ஆபரணங்கள் 4 இலச்சத்து 47 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (14) திகதி எதிர் நகைக் கடை உரிமையாளர் அவரது மனைவி. மற்றும் எதிர் நகைக் கடை உரிமையாளரின் கம்பளை கலஹா நண்பனும் நகைக்கடை ஒன்றின் உரிமையாளருமாகி 3 பேரை கைது செய்து  கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொலிஸ் தடுப்பு காவலில் விசாரணை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை இன்று வரை நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணையில் கம்பளை கலஹா வில் மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த  88 கிராம் 400 மில்லிகிராம் தங்க ஆபரணங்கள் மற்றும் 2 இலச்சத்து 38 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டனர்.

குறித்த நகைக் கடையின் பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பை கொள்ளையருக்கு வழங்கிய அந்த கடையின் முகாமையாளரை கைது செய்ததுடன் பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும்  இன்று ஞாயிற்றுக்கிழமை (16)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

No comments: