அரச ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை காணமுடிகின்றது -இராதா


(க.கிஷாந்தன்)

தபால்மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை காணமுடிகின்றது. தபால்மூல வாக்குகள்தான் வெற்றிபெறும் தரப்பை ஆரம்பத்தில் தீர்மானிக்கும். எனவே, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிப்பயணம் அரம்பித்துவிட்டது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டன் டிக்கோயா பகுதியில் 16.07.2020 அன்று மதியம் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையகத்தில் நாம் கணித, விஞ்ஞான பாடசாலைகளை உருவாக்கினோம். அனைத்து பௌதீக வளங்களையும் கொடுத்தோம். ஆனால், சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. எனவே, கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்ககூடிய 100 ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து வரவழைப்போம் என நான் யோசனை முன்வைத்திருந்தேன். பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய ஆசிரியர்களை வரவழைக்ககூடியதாக இருந்தால் அதனை நிச்சயம் செய்வோம். அவ்வாறு இல்லாவிட்டால் இங்குள்ளவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படவேண்டும். நான் மாகாணசபையில் இருக்கும்போது இவ்வாறான பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை., சர்வமத தலைவர்களிடமும் ஆசியும் ஆதரவும் திரட்டி வருகின்றோம். நான் இந்து சமயத்துக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளேன். எதிர்காலத்திலும் ஆற்றுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.

No comments: