குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி -உதயரூபன் குற்றச்சாட்டு


(சந்திரன் குமணன்)

கிழக்கு மாகாண கல்விச் செயலாளரால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி.

இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு ஒழுக்காற்று விசாரணையில் மாகாண கல்விச் செயலாளரால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட ஆசிரியருக்கு தொழிநுட்பப் பாடத்திற்குரிய உதவிக் கல்விப்பணிப்பாளர் நியமிப்பினை அதே மாகாண கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், மேற்படி பதில் நியமனமானது தாபன விதிக்கோவை மற்றும் 1589ஃ30 அதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைவாக வெளிப்படைத்தன்மையின்றி நியமிப்பு செய்யப்பட்டமை சட்ட ஆட்சியின் சட்ட நியாயாதிக்கங்களை கேள்விக்குறியாக்குள்ளதோடு மேற்படி பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் முன்னாள் முதலமைச்சருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தவர் என்றும் முழு நேர கொந்தராத்து நடவடிக்கைகளில் கடமை நேரங்களில் ஈடுபடுபவர் என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரைத் தாக்க முற்பட்டவர் என்பதுடன் சங்கம் மாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையிட்டும், அதிபரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலும் விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டவர் என்றும் தமது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை 2020.06.03 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரை உயிர் அச்சுறுத்தலுடன் கடத்த முற்பட்டமை தொடர்பாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பாகவும் உயர்மட்ட விசாரணைக்காக சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைக்கமைவாகவும், தேசியக் கல்விக் கொள்கையின் தரமான கல்விக்கு, தரமான முகாமைத்துவமிக்க வினைத்திறன் மிக்கதும், செயல்திறன் மிக்கதுமான கல்வியாளர்களையும், நிர்வாகிகளையும் நியமிப்பு செய்வதற்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் முன்வரவேண்டும் எனவும், கிழக்கு மாகாண கல்வி அரசியல் மயப்படுத்தப்படுவதையும் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சங்க மாவட்டச் செயலாளர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: