இனவாத அரசுடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளவர்களை வாக்களிப்பின் ஊடாக தோற்கடிக்க வேண்டும்


(கனகராசா சரவணன்)

19வது திருத்தத்தை இல்லாமல் செய்வது ஊடாகவும், கிழக்கு மாகாணத்திற்கென தொல்லியல் தொடர்பான ஒருபக்கச் சார்பான ஜனாதிபதி செயலணி அமைப்பது ஊடாகவும் சிங்கள பௌத்த மயமாக்கல் உருவாக்குவதற்கான சதி முயற்சியே. இதை வெற்றி கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தலைமைகள் அரசியல் ரீதியாக பலமடைய வேண்டுமென பத்மநாபா மன்றம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக ஐந்தரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் 75 வீதம் தமிழர்கள், 24 வீதம் முஸ்லிம்கள், 01 வீதம் சிங்களவர்கள் உள்ள இம் மாவட்டத்தில் முழுச் சிங்களவர்களையும் உள்ளடக்கிய பௌத்த செயலணி உருவாக்கியதன் மர்மம் என்ன ? நியாயமில்லாத சிறுபான்மையின மக்கள் சந்தேகக் கூடிய செயற்பாடுகளை ஜனாதிபதி செய்வதன் ஊடாக சிறுபான்மை தமிழர்களாகிய நாம் சிங்கள இனவாத அரசின் மீது சந்தேகம் கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதற்குப் பிற்பாடு 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக பல ஆணைக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மூவின மக்கள் இலங்கையில் வாழுகின்ற நிலையில் தமிழர்களுக் கெதிராக நிருவாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ச்சியாக ஒருபக்கச் சார்பான செயற்பாடே நடைபெற்று வருகின்றன.
ஆணைக்குழுக்கள் அமைத்து ஆணைக்குழுக்கள் ஊடாக வேலைகளை முன்னெடுக்கும் போது குறிப்பிட்ட வீதம் தமிழர்களுக்கு நியாயங்கள் கிடைக்கும். ஆனால் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியாக தவறான முறையில் ஆணைக்குழு மேல் செல்வாக்கு செலுத்தி விடமுடியாது.

உதாரணம் தேர்தல் ஆணைக்குழு. ஆணைக்குழுக்கள் அமைப்பது ஊடாக சிறுபான்மையினனருக்கு ஒரளவிற்கு பாதுகாப்பு உள்ளதென்பதை தமிழ்த் தலைமைகள் மறந்து விடக்கூடாது.

கிழக்கு மாகாணத்திற்கென புராதான காலத்தில் தொல்லியல் இடங்களை ஆய்வு செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் செயலணி ஜனநாயக பன்முகத் தனன்மை கொண்டதாக இல்லை. பௌத்த ஆதிக்கம் நிலைநாட்டப்படுமா? எனும் சந்தேகம் மிக ஆழமாக தமிழர்களின் மனங்களில் வேரூண்றியுள்ளது

இச்சூழலில் குறிப்பிட்டவர்களை மட்டும் வைத்து செயலணி உருவாக்கிய தென்பது சிங்கள பௌத்த மயமாக்கல் பொறிமுறையொன்றை கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்துவதை தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பௌத்த மயமாக்கலுக்குப் பின்னால் சேர்ந்து கொண்டு இனவாத ஆளுந்தரப்பினருடன்; தேர்தலில் களம் இறங்கியுள்ளவர்களை வாக்களிப்பின் ஊடாக தோற்கடித்து தமிழர்கள்; மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டு பௌத்த மயமாக்கலைத் தடுத்து நிறுத்தக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

No comments: