செந்தில் தொண்டமானை அழைத்து ஆலோசனை பெற்ற ஆளுநர் அலுவலகம்


(சதீஸ்)
ஊவா மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் தமிழ்க் கல்வி சார்ந்த அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்த நிலையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், கல்விப் பணிகளை முன்னெடுக்க செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். எனினும், அப்போதிருந்த அதிகாரிகள் அந்த செயலியை பயன்படுத்தவும், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

எனினும், இன்று கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த செயலியை பயன்படுத்துவது அத்தியாவசியமாகியுள்ளதால் செந்தில் தொண்டமானை அவசரமாக அழைத்த ஆளுநரின் செயலாளர் இதுகுறித்த ஆலோசனைகளைப் பெற்றுள்ளார்.

செந்தில் தொண்டமான் இந்தச் செயலியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்திருந்த போதிலும், அதனைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், தற்போதைய நிலையில் இதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.

கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று வளர்ச்சியடைந்த நாடுகளில் பாடசாலைகளில் உள்ள இந்தத் திட்டத்தை இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக இந்த செயலியை பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செயலியொன்றை உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும் முதல் பாடசாலையாக பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயம் தடம்பதித்துள்ளது.

இந்த செயலி மூலம், பாடசாலை மாணவர்களின் வருகை, அவர்களுக்கான பாட நெறிகள், வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாடசாலையில் நடத்தப்படும் பாடம் இந்த செயலியில் பதிவேற்றுவதற்கான வசதிகளும் உள்ளன. இதன்மூலம் பாடசாலை செல்லாத மாணவருக்கு வீட்டில் இருந்து இந்தப் பாடங்களைத் தொடரக்கூடிய வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களும் இந்த செயலியில் தமது வகுப்பறைப் பாடங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட போது இதன் பயன்பாட்டை அறியாத அதிகாரிகள், கொரோனா வைரசின் அச்சுறுத்தல் வந்தபின்னரே இந்தத் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.

இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து செந்தில் தொண்டமானுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம் செய்து, பாடசாலைகளை சுத்தப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

No comments: