மனித வியாபாரத்திலிருந்து எம் தேசக்குழந்தைகளை காப்பாற்றுங்கள்


மனிதவியாபாரம் என்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது என்ன மனிதவியாபாரம் என யோசிக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த 
கட்டுரையை எழுதுகிறேன்.கடந்த வருடத்தில் IOM நிறுவனத்தால் மனிதவியாபாரத்தை தவிர்க்கும் நோக்கில் சைக்கிள் பவணி மற்றும் கருத்தரங்கு என்பன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதிலே நானும் பங்கு பற்றி இருந்தேன்.

அந்த கருத்தரங்கில் நாம் மனிதவியாபாரம் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்காக ஒரு குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்த குறுந்திரைப்படம் ஓர் உண்மைக்கதை அதை உங்களுக்காக இங்கே சுருக்கமாக எழுதுகிறேன்.

" ஓர் பதின்ம வயது சிறுமி அவளது வீட்டில் மிகவும் வறுமையில் வாடி வருகிறாள். அந்த வறுமையை காரணங்காட்டி அவளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு அவளது மாமா உறவான ஒரு உறவினர் வந்து அவள் தந்தையிடம் பேசி அவருக்கு ஒருதொகை பணத்தை கொடுத்து சம்மதிக்க வைத்து அவளை கையோடு கொழும்பிற்கு அழைத்துச் செல்கிறார். வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த அந்த பிள்ளையும் வெகுளித்தனமாக அவரை நம்பி சென்று விட்டது. அங்கே ஓர் விடுதிக்கு அழைத்துச் சென்ற அவளது மாமா ஓர் பெண்ணிடம் கதைத்துவிட்டு அவளிடம் ஒரு தொகை பணத்தை வாங்கிவிட்டு அவளை அங்கே விட்டுச் செல்ல அப்பெண் பாலியல் தொழிலுக்கு அந்த சிறுமியை செய்ய வைக்கிறாள். அத்தோடு அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து வந்து தன்னுடைய வாழ்வை நினைத்து கதறுகிறாள்"


அத்தோடு அக்குறுந்திரைப்படம் முடிய அங்கே இருந்த பலர் அழுதே விட்டிருந்தனர்.
அதன் பின்னர் மனித வியாபாரம் பற்றி கற்பிக்கபட்டு கையேடுகளும் வழங்கப்பட்டன. அதன் பிறகு இதனை பற்றி நான் நிறைய தேடி இது போன்ற பல சோகக்கதைகளை திரட்டினேன். அவற்றை வைத்து ஆய்வுக்கட்டுரைகளும் எழுத பல ஆய்வுகளையும் மேற்கொண்டேன்.

அதன் அடிப்படையில் மனித வியாபாரம் குறித்த ஓர் தெளிவை இக்கட்டுரையில் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

இனி வாருங்கள் இந்த மனிதவியாபாரம் பற்றி பார்ப்போம்.
மனித வியாபாரம் என்பது உலகெங்கிலுமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு குற்றச் செயலாகும். இது அடிமைச் சேவை செய்வதற்கு ஒப்பானது.சாதாரண மக்களின் பொருளாதார, சமூக அபாயத்திற்குள்ளாகும் நிலைமைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு மக்களை தந்திரமாக ஏமாற்றி மோசடி செய்து, ஏமாற்றமான சூழ்நிலைக்குள் செல்ல மோசடிக்காரர் நிர்ப்பந்திக்கின்றனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பல்வேறு வகையில் சுரண்டலுக்கு ஆளாக முடியும்.
வீட்டுப் பணியாளர்களாக
ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களாக
தொழிற்சாலைகளில் பணியாளர்களாக
கட்டுமாணநிர்மாண தங்களில் பணியாளர்களாக
பொய்யான திருமண வாக்குறுதிகள் மூலம்
பாலியல் சுரண்டல்
ஆபாசப்படங்களில் நடிக்க வைத்தல்
உடல் உறுப்புக்களை நீக்குதல்.
இவ்வாறான பல வழிகளில் மனிதவியாபாரங்கள் இடம்பெற்று வருகின்றன.


IOM நிறுவனமும் Walk Free அமைப்பும் இணைந்து வெளியிட்ட 2017 ஆண்டின் அறிக்கை படி ( Global Estimate of Modern Slavery) உலகில் நவீன அடிமைத்துவத்தால் பாதிப்புற்றவர்களில் சுமார் 40.1 மில்லியன் மக்கள் மனித வியாபாரத்திற்கு அல்லது பல்வேறு சுரண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 1/4 பகுதியினர் புலம்பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
அமெரிக்க அரச திணைக்கள மதிப்பீட்டின் படி :
ஆண்டு தோரும் சுமார் 600,000 முதல் 800,000 எண்ணிக்கையான மனிதர்கள் எல்லைகளுக்கூடாக விற்கப்படுகிறார்கள்.
இதில் 80% ஆனவர்கள் பெண்கள் ஆவார்கள் அவ்விகிதாசாரத்தில் 70% ஆனவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக வேண்டி மனித விற்பனைக்கு ஆளாகிறார்கள்.
2017 ஆரம்பம் முதல் 2018 தொடக்கம் வரையிலான காலப்பகுதியில் இலங்கைகுற்றப்புலனாய்வு திணைக்களமும் பொலீசாரும் மனித வியாபாரம் தொடர்பிலான 15 சம்பவங்களை விசாரணை நடத்தியுள்ளார்கள். இவற்றில் 10 சம்பவங்கள் உழைப்பு சுரண்டல் பற்றியதுமாகும். ஒரு சம்பவம் மாத்திரம் சிறுவர் சுரண்டல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காலப்பிரிவில் மனிதவியாபாரம் மற்றும் வாங்குதல் (Procuration) தொடர்பில் அரசாங்கத்தினால் 28 வழக்குகள் (சென்ற வருடங்களில் பதிவான சம்பவங்கள் உள்ளடங்களாக) தொடரப்பட்டுள்ளன. 28 வழக்குகளில் 4 வழக்குகள் 360(C) பிரிவின் கீழ் மனித வியாபாரம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, 3 பாலியல் சம்பந்தமான மனித விற்பனையும் 1 துஷ்பிரயோகத்திற்காக வேண்டி பிள்ளையை விற்பனை செய்தமையும் ஆகும்.
கடந்த காலத்தில் (2016) 16 வயது சிறுவனை வெளிநாட்டு உல்லாசப்பிரயாணி ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக வேண்டி வாங்கியமை (Procuration) தொடர்பில் நபர் ஒருவர் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டார்.
இந்த நிலையில் இவற்றினை தடுக்கும் நோக்கிலும், குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையை வழங்கும் நோக்கிலும் மனித வியாபாரம் தொடர்பிலான தேசிய,பிராந்திய, சர்வதேச சட்ட வரம்புகள் அமுலுக்கு வந்தன.
சர்வதேச சட்டம் :
குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் மனித வியாபாரத்திற்கு ஆட்படுவதை தடுத்தல், ஒழித்தல்,தண்டனை வழங்கல் பற்றிய நெறிமுறை
(Palermo protocol)2000(2003)
பிராந்திய சட்டம்:
பெண்கள் மற்றும் பிள்ளைகளை விபச்சாரத்திற்காக விற்கப்படுவதை தடுத்தல், பற்றிய சார்க் மாநாடு 2002(2005)
தேசிய சட்டம்:
2000
ஆண்டு .நா சபையின் மனித வியாபாரம் பற்றிய நெறிமுறைக்கேற்ப 2006 ஆம் ஆண்டு 16 இலக்க குற்றவியல்
சட்டக்கோவையின் (திருத்தம்)
சட்டம் 360(C)
இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் வியாபாரத்திற்கான தண்டனை
2
வருடங்களுக்கு குறைவற்ற 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைவாசம். அத்தோடு அபராதமும் செலுத்த நேரிடலாம்.
சிறுவர்கள் (18 வயதுக்கு குறைந்த ஒருவர் என வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது) சம்பந்தப்பட்ட மனித விற்பனை குற்றமாயின்- ஆகக்குறைந்த தண்டனையாக 3 வருட சிறை வாசமும் ஆகக்கூடியது 20 வருட சிறைவாசமும் வழங்கப்படும்.

இவ்வாறு மனித வியாபாரங்கள் உங்கள் மத்தியிலும் இடம்பெறலாம். முடிந்தவரை விழிப்புணர்வாக இருங்கள். இன்னும் பல விடயங்கள் அக் கருத்தரங்கில் பேசப்பட்டன. அவற்றினை இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம். முடிந்தவரை நாம் அனைவரும் சமூதாயத்தில் ஓர் நற்பிரஜையாக வாழ வேண்டுமாயின் அடுத்தவரை கஷ்டப்படுத்தாமல் வாழப்பழக வேண்டும். எம்முள்ளே நாம் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் இவ்வாறான மனிதவியாபாரங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும். அத்தோடு நமது சிறுவர்களுக்கு இவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களை காப்பாற்றுங்கள்.

நன்றி
பிரியா நடேசன்
(பிரதம செய்தி ஆசிரியர்
வடக்கு)


No comments: