பணத்திற்காக கிரிக்கெட் ? வன்மையாக கண்டிக்கின்றேன் ஜனகன்


இலங்கைக்கு உலகளவில் புகழ் சேர்க்கும் கிரிக்கட் விளையாட்டு வீரர்களை கலங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வௌியிட்டுள்ள கருத்துக்களை வன்மையான கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்

இன்று (19) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்தனை குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், இலங்கை அணியினர் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை இலங்கை அணியிடம் இருந்த போதிலும், பணத்திற்காக அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கட் வீரர்கள் தொடர்பில் யாரினது பெயரையும் குறிப்பிடாமல் குற்றம்சாட்டுவது கிரிக்கட் வீரர்களை காலில் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்கு சமனானது என்று கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட கலாநிதி. வி.ஜனகன், "பொதுவாக மஹிந்தானந்த அளுத்கமேகே இவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதில் சிறந்த வீரர் என்று கூற முடியும்.

எனவே, எங்களுடைய கிரிக்கட் வீரர்களை கலங்கப்படுத்தி பேசி அரசியல் செய்வது மிகவும் வருந்தக்க விடயமாக இருக்கின்றது.

அத்துடன், கலங்கப்படுத்தி பேசுவது மாத்திரமன்றி அச்சுறுத்தல் மேற்கொள்ளவும் செய்கிறார்.

இன்று எங்களது சிறுபான்மை மக்களை மிரட்டும் தொனியில் பேசவும் ஆரம்பித்து விட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 10 வீத முஸ்லிம்கள் மாத்திரம்தான் தங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும், இந்த முறை பொதுத்தேர்லில் 25 சதவீதம் வாக்களிக்காவிட்டால் அவர்கள் துன்பப்பட நேரிடும் என்ற அடிப்படையில் மஹிந்தானந்த தௌிவாக கூறியிருக்கின்றார்.

நாம் இதனை உற்று நோக்கினால், அரசாங்க தரப்பில் இருக்கக் கூடிய ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் வீரமாக இந்த வசனத்தை மிரட்டும் தொனியில் கூறுகிறார் என்றால், அவருக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தார் என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

இதை ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்பதுடன், இன்று மதவாதம் மாத்திரமன்றி மிரட்டுகின்ற தொனியும் ஆரம்பித்து விட்டால், பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அவர்களின் மதவாதத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிட்டால் எவ்வளவு சமூக சீரழிவினை சிறுபான்மை சமூகத்தினர் சந்திக்க போகின்றார்கள் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டினார்.

2011 ஏப்ரல் 2 ஆம் திகதி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அஞ்சலோ மெத்வ்யஸ் ஆகியோர் உபாதைக்குள்ளானதால் சமிந்த வாஸூம், சுராஜ் ரந்திவ்வும் கிரிக்கட் குழாத்தில் இணைக்கப்பட்டனர்.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது.

அதுவரை போட்டிகளில் பங்கேற்றிருந்த சாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோருக்கு பதிலாக இறுதிப் போட்டியில் சாமர கப்புகெதர, திசர, பெரேரா, சுராஜ் ரந்திவ், நுவன் குலசேகர ஆகியோரை அப்போதைய தெரிவுக்குழு அணியில் சேர்த்துக் கொண்டது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகேவின் இந்த கருத்துக்கள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று குறிப்பிட்ட கலாநிதி வி.ஜனகன், எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாட்டின் அனைத்து மதங்களையும், இனங்களையும் இணைத்துக் கொணடு பயணிக்க விரும்புகின்றோம்.

பொதுத் தேர்தல் காலகட்டத்தில் பெயர் குறிப்பிடாமல் ஒருவரை குற்றம் சாட்டுவதென்பது வெறுமனே அரசியல் கூற்றாகவே இருக்கின்றது.

அவரது கருத்துக்கள் இலங்கையை உலகளவில் கொண்டுச் செல்லக் கூடிய கிரிக்கட் விளையாட்டையும், அதன் வீரர்களையும் அவமானப்படுத்துவதேயன்றி, எங்களது ஐக்கிய மக்கள் சக்தியை வீழத்துவதற்கு அவரால் முடியாது என்பதை வலியுறுத்துகிறேன்.

No comments: