தொல்பாருள் கண்காணிப்பின்போது தமிழர்களும் இடம்பெற வேண்டும்


(கனராசா சரவணன்)

தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களும் இடம்பெறவேண்டுமென கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (14) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வள நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினர் மேலும் தெரிவிக்கையில்

அண்மைய காலங்களில் எமது ஜனாதிபதியால் கிழக்கிலங்கையில் இருக்கின்ற தொல்பொருள் சார்ந்த ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைத்திருக்கிறார் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம்.

 உண்மையிலேயே இலங்கை வரலாற்றில் அதுவும் கிழக்கிலங்கையை பொறுத்த வரையில் இந்த அகழ்வாராய்ச்சியில் அதாவது தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகளில் என்பது முதன்முறையாக அரச சார்போடு நடக்கிறது என்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதிலிருக்கின்ற சில குறைபாடுகளை நாங்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

அதாவது ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் இருப்பது இராணுவமும் இராணுவம் சார்ந்த அமைப்பினரும் அதற்க்கு அடுத்தபடியாக மதகுரு சார்ந்த அமைப்பினரும் தான் அதிகபடியாக இருக்கின்றார்கள். 

கிழக்கிலங்கை என்பது தொல்குடிகளுக்கு பிரபல்யமாக இருந்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். இலங்கையை பொறுத்தவரையில் பல்இனத்தவர்கள் மற்றும் பல்மதத்தவர்கள் வாழ்ந்தாலும் தொல்குடியினர் என்போர் இலங்கைக்கே உரித்தானவர்கள் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அண்மைய காலங்களில் இலங்கை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து தொட்டுணரா பண்பாட்டு மரபுகள் மற்றும் பன்மைத்துவ கலாசாரத்தைப் பேணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கிலங்கையில் இவ்வாறான ஒரு செயற்பாட்டை அரசசார்பாக மேற்கொள்வதாக இருந்தால் முதல்முதலில் இங்கிருக்கின்ற ஆதிப்பிரஜைகள் அதாவது வேடர்கள் கடலோர வேடர்கள் அதோடு ஏனைய பூர்வீக குடிகளைச் சார்ந்த அமைப்பிலிருந்தும் அவர்களது பிரதிநிதிகளை இதற்குள் உள்வாங்க வேண்டும்.

அடுத்தாக இலங்கையில் கிழக்கிலங்கையில் உள்ள தொல்பொருள் அமைப்புக்களை பார்க்கப்போகிறோம் என்றால் பொத்துவில் தொடக்கம் திருகோணமலை வரையான எத்தனையோ பிரதேசங்கள் தொல்பொருள் சார்ந்த இடங்களாக இணங்காணப்பட்டு அறியப்பட்டு வருகின்றது. 

அதில் அநேகமானவை தொன்று தொட்டு தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களாக இருப்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட இந்த குழுவில் தமிழர்கள் ஒருவரும் இணைக்கப்படாதது எமக்கு மிகுந்த வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

மேன்மைதங்கிய ஜனாதிபதி இலங்கையின் இறைமையை பாதுகாப்பதிலும் இலங்கையை அபிவிருத்தியை நோக்கி இட்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்’துக் கொண்டிருக்கின்ற அதே நேரம் இவ்வாறான ஒரு செயற்பாடு இலங்கையில் மேற்கொள்ளபடுமாக இருந்தால் அது ஒரு தமிழர்களின் அதாவது கிழக்குவாழ் தமிழர்களின் உணர்வுகள் சார்ந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்னெடுப்புக்களை சாத்தியமாக்காத ஒரு விடயமாக இருக்குமென்பதை நாங்கள் அறியப்படுத்துகின்றோம். 

அதற்காக தான் கிழக்கிலங்கையில் இருக்கின்ற உயர்கல்வி மாணவர் ஒன்றியமாகிய நாங்கள் இந்த அறிக்கையை ஜனாதிபதி அவர்களுக்கு பணிவான ஒரு வேண்டுகோளாக இவ்விடத்தில் விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.


இலங்கையில் இருக்கின்ற மக்கள் இன ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ சண்டை பிடித்தாலும் உண்மையில் இலங்கையின் புர்வீக குடிகள் என்றால் அது ஆதிப்பிரஜைகள் தான். அவர்கள் யார் என்று பார்த்தால் வேடர்கள். ஆகவே இந்த புர்வீக குடிகள் சார்ந்த பிரதிநிதிகளை இதற்குள் உள்வாங்க வேண்டும் என்பதே எமது அழுத்தமான கேள்வி. எமது முதலாவது கோரிக்கை. 

அதோடு இலங்கை தேசத்தில் மும்மொழிகளும் வாழுகின்ற இறைமையை பேணுகின்ற இலங்கை தேசத்தில் கிழக்கிலங்கை சார்ந்து இம்முயற்சிகள் முன்னெடுப்பது மிகமிக மகிழ்ச்சிக்குரிய விடயம். அதே நேரம் அந்த குழுவில் இருக்கும் அங்கத்தவர்களுடன் இந்த துறைசார்ந்த வல்லுனர்களான இரண்டு தமிழ் பிரஜைகள் என்றாலும் இக்குழுவில் இணைக்கப்பட வேண்டும். அப்போது தான் கிழக்கிலங்கையில் காணப்படுகின்ற தொல்பொருள் சார்ந்த அனைத்து ஆவணங்கள் அனைத்தும் மிக மிக உறுதியான நம்பகத்தன்மையுடன் ஆவணப்படுத்தபடும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லி கடந்த காலங்களில் மதிப்பிற்குரிய அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இந்த நடவடிக்கைகள் பற்றி சொல்லியிருந்தாலும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் தமிழ் என்று கதைத்துக்கொண்டு வருகின்றது தானே ஒழிய எத்தனை பேருக்கு தமிழில் தேசிய கீதம் தெரியும் என்பதே ஒரு பிரச்சினையாக இருக்கின்றது என தெரிவித்தார்கள்.

No comments: