பல்கலைக்கழக கனவை நிறைவேற்றுவேன் -ஜீவன்


(கேதீஸ்)

பல இடையூறுகளுக்கு மத்தியிலும் எனது தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து ஆறுதல் தெரிவித்து சகல ஒத்துழைப்பும் நல்கிய மலையக உறவுகள் அனைவருக்கும் எனது குடும்பத்தாரின் சார்பில் சிரம் தாழ்த்தி எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளரும் மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் என்ற நெருக்கடிக்குள் எமது நாடு இருந்தாலும், எனது தந்தையின் இறுதிக் கிரியைகளை செய்வதற்கு உதவிய கௌரவ ஜனாதிபதி கோட்டாபேய ராஜபக்ஷ,கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், அரசாங்க அதிகாரிகள், முப்படையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

மேலும் கௌரவ அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது அனுதாபத்தினை தெரிவித்து இரங்கல் உரைகளையும் ஆற்றிச் சென்றனர். 

அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவிப்பதுடன் சமய இரங்கலுரை ஆற்றிய மதத் தலைவர்களுக்கும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்களுக்கும்,மலையக உறவுகள் அனைவருக்கும், முகநூல் மற்றும் இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த வேதனையுடன் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 அத்துடன் ஊரடங்கு வேளையிலும் சமூக இடைவெளியைப் பேணி வீதிகளில் நின்று மலர்தூவி, மாபெரும் தலைவனை அனுப்பி வைத்த எனது உயிரிலும் மேலான எனது மலையக உடன் பிறப்புகளுக்கும் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த எமது சொந்தங்களுக்கும் இலங்கை திருநாட்டில் எங்கெல்லாம் எனது தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்து அஞ்சலி செலுத்திய அனைத்து உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

எனது தந்தை இறக்கும் வரை மலையக உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு செய்ய விரும்பிய வேலைத்திட்டங்கள் பற்றியும் அடிக்கடி என்னிடம் கூறி வந்தார். அவருடைய கனவுகளை உங்களின் ஒத்துழைப்புடன் நனவாக்குவதே எனது முதல் கடமையாகும். 

உயர்கல்வி அமைச்சின் உதவியுடன் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதே அவருடைய நீண்ட கால கனவு அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். 

எதிர்வருங்காலங்களில் அரசுடன் இணைந்து மலையக உறவுகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வேன். 

இந்திய அரசின் உதவியுடன் மலையக உறவுகளுக்கான வீடமைப்பு திட்டத்தினூடாக கிராமங்களை உருவாக்குதலே தந்தையாரின் இன்னொரு கனவாகும். 

எனது தந்தை இறக்கின்ற அன்றைய தினமும் கூட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் எமது மக்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைப் பற்றியே கதைத்திருந்தார். 

பிரதமர் அவர்களும் எமது மக்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்திருந்தார். 

அந்தவகையில் எனது தந்தையாரின் கனவுகளை நிறைவேற்றுவதே எனது கடமை அதனை எனது முழு இலட்சியமாகக் கொண்டு இன்று முதல் செயல்படுவேன் என்றார்.

No comments: