இன்று அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் அமைதியின்மை


(சந்திரன் குமணன்)

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.

அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் இன்று மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் இன்று அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

பிரதேச செயலகத்திற்கு சமுகமளித்த மக்களின் சார்பிலான பிரதிநிதிகளை சந்திக்க பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாமல் இருந்த நிலையில் முஹுது மகாவிகாரை பிரதேசத்தில் நில அளவை திணைக்கள, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவிட வருகை தந்திருந்தனர். இந்த செய்தி பரவியதை அடுத்து இன்று காலை மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸார், ராணுவ வீரர்கள் களத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கினர். இங்கு சமுகமளித்த பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித், பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி முஷாரப் முத்துநபின் ஆகியோர் அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரை தொலைபேசியுடாக அழைத்து பேசினர்.

விடயங்களை கேட்டறிந்த மாவட்ட செயலாளர் நாளை மாலை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்த நேரம் வழங்கிய செய்தியை மக்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடங்கிய குழுவினர் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹாவிகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்க்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments: