பொத்துவில் நில அளவை தற்காலிகமாக இடைநிறுத்தம்


(பொத்துவில் நிருபர்)

தேர்தல் முடியும் வரை பொத்துவில் மண் மலை தொல்லியல் நிலத்தை அளந்து எல்லைக்கற்கள் போடுவதை இடைநிறுத்துவதாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பொத்துவில் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

பொத்துவில் மண் மலை தொல்பொருள் காணி விவகாரம் சம்பந்தமாக பொத்துவிலில் இருந்து புத்திஜீவிகள் குழுவில் அங்கம் வகிக்கும் 10 நபர்களும் பிரச்சினை எழுந்துள்ள பகுதியிலிருந்து குடியிருப்பு மக்கள் சார்பாக 03 நபர்களும் நேற்று 2.30 மணியளவில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து, பொத்துவில் தொல்பொருள் இடப்பிரச்சினை நிலப் பிரச்சினை ஆக்கிரமிப்பு பிழையான செய்தி வெளியிடும் சிங்கள ஊடகங்கள் பற்றிய  பல விடயங்களை  மாவட்ட அதிபருக்கு  பொத்துவிலில் இருந்து சென்ற குழுவினர் தெளிவு படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபர் தொல்பொருள் சம்பந்தமாக பல விடயங்களை கலந்தாலோசித்தவுடன் தற்காலிகமாக தேர்தல் முடியும் வரை அளவை செய்வதை இடை நிறுத்தியுள்ளார்.
இச்சந்திப்பானது பொத்துவில் மக்களுக்கு சாதகமாக அமையும் என சந்திப்பில் கலந்து கொண்டோர்கள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், ஆகியோர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments: