நெடுந்தூரப் பயணிகளின் அசௌகரியங்கள் தீர்க்கப்படவேண்டும் வி.ஜனகன்


கொழும்பு மாவட்டத்துக்கு வௌிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், தங்குமிட வசதிகள் இன்றி வீதிகளில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுகையில்,

“வந்தாரை வாழ வைக்கும் கொழும்பு மாவட்டம் கொவிட்-19ஆல் ஏற்பட்ட நிர்வாக முடக்கத்தின் பின்னர் படிப்படியாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து வருகின்றது. தலைநகர் கொழும்பில் அனைத்து அரச நிர்வாக அலுவலகங்களும் முக்கியமான நிறுவனங்களும் தலைமைக் காரியாலயங்களைக் கொண்டுள்ளன. கொழும்புக்கு வௌிமாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாளாந்தம் வருகை தருவார்கள், தங்குவார்கள், தமது முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பயணங்களை மேற்கொள்வார்கள்.

முக்கியமாக வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இங்கு வருவார்கள். இந்தநிலையில், கொவிட்-19ஆல் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக முடக்கத்துக்குப் பின்னர் பல விடுதிகள் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதன்காரணமாக அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் பேருந்துகளில் வந்திறங்கும் தூரப் பிரதேச மக்கள், பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொவிட்-19 பிரச்சினையின் காரணமாக உறவினர்களும் தற்போது அந்தப் பயணிகளை வீடுகளுக்குள் அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதேவளை, விடுதி உரிமையாளர்களுக்கு இன்னமும் அதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. நாளாந்தம் பல நெடுந்தூரப் பயணிகளும், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் கொழும்புக்கு வந்த பின்னர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துத் தொலைபேசி மூலமாக என்னிடம் முறையிடுகின்றனர். அவர்களுக்கு உடைகளை மாற்றுவதற்கோ, இளைப்பாறுவதற்கோ மற்றும் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதனைச் சாதாரண பிரச்சினையாக நோக்காமல் அத்தியாவசியத் தேவையாகக் கருதி, விடுதிகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும். இன்றைய நிலையில் ஏனைய நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களைத் திறந்து கொண்டிருக்கும் அரசாங்கம் இதுகுறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நெடுந்தூர போக்குவரத்து பேருந்துகளைச் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ள நிலையில், பயணிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முற்பட வேண்டும். லொட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களை அதிகாலையிலேயே திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இது பாரிய பிரச்சினையைத் தோற்றுவித்துவிடும்.

எனவே, கொவிட்-19 பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைவாக அவர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்று கலாநிதி வி.ஜனகன் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மேலும் வலியுறுத்தினார்.

No comments: