அனைத்தையும் வைத்து அரசியல் செய்கிறார்கள் குற்றம் சுமத்தும் -வி.ஜனகன்


எதிர்வரும் தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள ஆளும் கட்சியினர் கிடைக்கின்ற அனைத்தையும் வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் நேற்று (25) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம்சுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆளும் தரப்பினர் ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று விடுவதாக தம்பட்டம் அடித்துவிட்டு பின்னர் அதனை மறந்து விட்டார்கள் அந்த பின்னடைவை மறைக்கும் முகமாக வென்றுவிடுவோம் என்று கூறினார்கள்.

ஆனால் இன்றளவில் வெற்றி பெறமாட்டோம் என்று
ஆளும் தரப்புக்கு விளங்கிவிட்டது. எனவே, தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பிரச்சினை என்கிறார்கள்.

அதன்பிறகு ஹரின் பெர்ணான்டோவின் பிரச்சினையையும், கருணாவின் பிரச்சினையையும் கையிலெடுத்திருக்கின்றார்கள். இப்படி இருக்கின்ற
அனைத்து பிரச்சினைகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றதென ஆளும் கட்சிக்கு தெரியாது. அத்துடன் இன்னும் ஒரு படி மேலே சென்று மதங்களை
வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இந்தநிலையில், தாங்கள் என்ன காரணத்தைக் கூறி வெற்றிபெறப் போகிறோம் என்று செய்வதறியாது இப்போது நாளுக்கு நாள்
கிடைக்கின்ற விடயங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளும் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை
பார்க்கும் போது பரிதாபமாக இருக்கின்றது.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது தௌிவாக விளங்குகின்றது.

எனினும், ஏனைய கட்சித்தலைவர்களோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களுடனோ நான் தோன்றும் புகைப்படங்களை
வைத்துக் கொண்டு அவர்களுடன் அரசியலில் இணைந்து விட்டேன் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

குறித்த புகைப்படங்களின் ஊடாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள முடியும், நான் சகோதர சிங்கள மொழி அரசியவாதிகளுடனும், ஆளும் தரப்பில் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனோ, அல்லது முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் போன்றவர்களுடனோ, அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் வேறு உறுப்பினர்களுடனோ தோன்றும் புகைப்படங்கள் நல்ல எடுத்துக் காட்டையெ வெளிப்படுத்துகின்றன.

அதாவது, அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களுடனும் எனக்கு நல்லுறவு இருக்கின்றதென்பதை அந்த படங்கள்
சுட்டிக்காட்டுகின்றன.

இதனை வைத்துக்கொண்டு நான் அவர்களுடன் அரசியலில் இணைந்துவிட்டேன் என்றோ, கட்சி மாறுகிறேன் என்றோ தவறான
கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது.

நான் நாடளாவிய ரீதியாக பல கிளைகளைக் கொண்ட தனியார் கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற ரீதியில் நாட்டில்
அனைத்து அரசியல் தரப்பினருடனும், சிறந்த தொடர்புகளை பேணி வருகிறேன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், முன்னாள் சபா நாயகர் கரு
ஜெயசூரியவுடனும், முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களுடனும்
எனக்கு சிறந்த நட்பு இருக்கின்றது.

இதற்காக நான் அவர்களுடன் எதிர்காலத்தில் இணைந்து விடுவேனோ என்று சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது ஏற்றுக் கொள்ள
முடியாத விடயம். கல்வித்துறை சார்ந்த விடயங்களுக்காக அவர்களுடன் நான் தொடர்பில் இருப்பது வழமையான விடயம்தான்.

எனது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணிதான், அதில் தேசிய அமைப்புச் செயலாளராக செயற்பட்டு வருகின்றேன்.

ஆனால், நான் பிற கட்சிகளின் மேடைகளில் ஏறி அரசியல் பேசவில்லை என்பதுடன், அவர்களின் உறுப்பினராக என்னை நியமிக்கவில்லை.

அதேவேளை, இலங்கை என்பது ஒரு சிறிய நாடு, இந்தியா போன்று பெரிய துணைக் கண்டம் அல்ல. இங்கு அனைவரோடும் நல்ல
தொடர்புகளை வைத்திருப்பது முக்கியமாகும்.

இருந்தபோதும், மஹிந்த அணியினர் ரணில் அணியினரோடு தொடர்புகளை பேணுவது தொடர்பாக நான் எந்த கருத்தையும் கூற
முடியாது.

அதுபற்றி ரணில் விக்கிரமசிங்கவுடனும், அவரை வழிநடத்தும் மத்திய வங்கியு ஒப்பந்த காரரும்தான் பதில் கூற வேண்டும்." என்று கலாநிதி வி.ஜனகன் குறிப்பிட்டார்.

No comments: