தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் -ஜனா


(கனகராசா சரவணன்)

அரசாங்கம் நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலம் பெறச் செய்யவேண்டும். அரசாங்கத்தின் 3ல் 2 பெரும்பான்மை பெறும் கனவை உடைத்தெறிய வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று சனிக்கிழமை (20) பகல் மட்டக்களப்பு திருமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில், ரெலோவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நவரெத்திரராசா கமலேஸ்வரன், ரெலோவின் பிரதித்தலைவர இந்தியகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபை பிரதிமேயர் க. சத்தியசீலன், ஏனைய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளரகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதன் போது வேட்பாளரான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை தமிழ் மக்களுக்கு குறிப்பாக வட கிழக்கு மக்களுக்கு மிகச்சாவாலான தேர்தலாகப் பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 16 அரசியல் கட்சிகளும், 22 சுயெட்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் போட்டியிடுகின்றன. மொத்தமான 304 வேட்பாளர்கள் 5 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த 304 வேட்பாளர்களும் தாங்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையிலே இருக்கிறார்கள். இதில் ஒருசிலர் அமைச்சராகுவோம் என்று இப்போதே கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தமிழ் மக்கள் இருக்கும் 3 கட்களும், 3 முஸ்லிம் கட்சிகளும் தவிர ஏனையவர்கள் 5000 வாக்குகளைத் தாண்ட மாட்டார்கள் என்ற எண்ணப்பாடு மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கிறது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக குறைந்தது 3 ஆசனங்களைப் பெறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதில் எங்களுக்கிருக்கும் சவால், அதுவும் லேசான சவால், முஸ்லிம் மக்கள் மத்தியில் 3 பிரிவுகளாகப் பிரிந்திருப்பதனால் இந்தத்தடவை 4 உறுப்பினர்களை கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலைப் போன்று பெறுவதற்கான சாத்தியப்பாடு மிகவும் வெளிச்சமாக இருக்கின்றது.

அதிலும் அடுத்த 5 வது ஆசனத்தைப் பெறுவதற்கு மொட்டுக் கட்சிகளில் கேட்கும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் கேட்கும் உறுப்பினர்களும் போட்டியிடுகிறார்கள். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலை நாங்கள் உற்று நோக்கிச் சிந்திப்போமாக இருந்தால், இவர்களுக்குள்ள வாக்கு வங்கி மொட்டுக் கட்சியில் வந்தாலும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலும் வந்தாலும் அவர்கள் மகிந்த ராஜஸபக்ச ஆட்சியிலேயே தான் போய்ச் சேரவுள்ளார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் அனைவரும் இணைந்துதான் மொட்டுக்கு வாக்குச் சேர்த்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 38ஆயிரம் வாக்குகளைத்தான் மொட்டுக் கட்சி பெற்றது. அந்த வாக்குகளில் கிட்டத்தட்டட 7ஆயிரம் வாக்குகள் சின்னவத்த, கெவுளியாமடு, புழுக்குணாவ, மங்களகம, மகோயா, ரிதிதென்ன ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களது வாக்குகளாகும்.

அது தவிர முஸ்லிம் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கிட்டத்தட்ட 5ஆயிரம் வாக்குகள் . இவை அனைத்தையும் தவிர்த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளரல்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் அந்த சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் வாக்குகள் தான் அவை. 

இத்தனை வாக்குகளும் இணைந்தால் தான் அந்த ஒரு ஆசனத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வாக்குகள் பிரிபடும் போது யாருக்கும் ஆசனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் 1 லட்சத்து 27ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தோம். நாங்கள் அதேயளவு அல்லது சற்று அதிகமாகப் பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக 4 ஆசனங்களைப் பெறும் என்பது எனது திண்ணம்.

கடந்த காலங்களிலே நமது இனம்பட்ட துன்பங்களை நான் விலாவாரியாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அந்த அனர்த்தங்கள், அந்த துன்பியல் சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் கண்கூடாகக்கண்டவர்கள். அவைகளுக் கோர் தீர்வு வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு ஒரு தீர்வு வேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக சுயாட்சி உரிமையுடன் வாழவேண்டூமாக இருந்தால் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேரம் பேசும் சக்தியாக இந்த நாட்டில் மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை , குறிப்பாக தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் கட்சி 3 ல் 2 பெரும்பான்மையைப் பெறுவதற்கு மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பெரும்பான்மையைப் பெற்று இந்த நாட்டை ஒரு வித்தியாசமாக கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். அந்த நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலம் பெறச் செய்யவேண்டும்.

அவ்வாறான நிலையில் அந்த 3 ல் 2 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு எங்களுடன் பேரம் பேசலாம். எங்களுடன் பேரம் பேசும் பொது நாங்கள் எமது மக்களின் தேவைகளை எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு முன்நிற்கும் அதற்கான ஆணையை நீங்கள் வழங்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் ராஜபக்ச அரசாங்கம் எதை செய்லாலும், அந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருந்தவர்கள் தட்டிக் கேட்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட கிழக்கு மாகாணத்தினைப் பௌத்த மயமாக்குவதற்காக பௌத்த அடையாளங்களைக் கண்டுபி-டிப்பதற்காக முன்னாள் இராணுவத்தளபதி தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் தலைமையில் ஓய்வு பெறற்ற இராணுவ அதிகாரிகள், பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு செயலணியை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக 100 வீதம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளியல் செய்யவிருக்கிறார்கள். இதற்கு நாங்கள் எதனை நினைக்கிறோம். அவர்கள் புதைக்க இருக்கிறார்களோ, எடுக்கவிருக்கிறார்களோ,? கிழக்கு மாகாணத்தினை சிங்கள மயமாக்குவதற்கான அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாரகள். அதற்குக் கூட எதனைச் செய்தார்கள்.

தட்டிக் கேட்க வக்கில்லாதவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்து அவர்களது அடிவருடிகளாக இருந்து அவர்களுடன் இணைந்து நடக்கப் பொகும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கப் போகின்றார்களா? என்ற கேள்வி எம் ஒவ்வொருவர் மத்தியிலும் எழவேண்டும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும். ஏன்றார்

இந் நிகழ்வில், கலந்துகொண்ட ரெலோவின் மற்றொரு வேட்பாளரான நவரெத்தினராசா கமலேஸ்வரன், மற்றும் ரெலோவின் பிரதித்தலைவர இந்தியகுமார் பிரசன்னா ஆகியோர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது .

No comments: