இராவணனின் உண்மை வரலாறு- பகுதி 2

குறிப்பு 

இந்த வரலாற்று கட்டுரையின் முழு அதிகாரமும் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களையே சாரும் ஆய்வாளரின் அனுமதியின்றி வேறு தளங்களில் இதனை பிரசுரிப்பது குற்றமாகும்!..

தமிழர்களின் உதாசீனப் போக்கு

இலங்கை இந்துக்களின் பண்டைய அடையாளச் சின்னமாகவும், சரித்திர நாயகனாகவும் திகழ்ந்த இராவணனை நாம் மறந்தது ஏன்? இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டில் சிவழிபாட்டை மேலோங்கச் செய்திருந்த அச்சிவபக்தன் மீது அப்படி என்ன கோபம்? இந்த அளவுக்கு இராவணனை வெறுப்பதற்கு அவன் செய்த மகாபாதகம் என்ன?

இப்படிப்பட்ட கேள்விகளோடு இராவணனை தமிழ் மக்கள் வெறுப் பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்த போது இரண்டு விடயங்கள் வெளிப்பட்டன. ஒன்று இராவணன் தனது ஆணவத்தால் முழுமுதற் கடவுளான சிவனின் கைலாய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான் என்பதாகும்.


இரண்டாவது இராமனின் மனைவியான சீதையை கவர்ந்து வந்தான் என்பதாகும். இதில் முதலாவது நிகழ்வு இராவணனை ஆணவம் பிடித்தவன் எனவும், இரண்டாவது நிகழ்வு துஷ்டன், பெண் பித்தன் எனவும் வர்ணிக்கிறது. இந்தக் காரணங்களை முன்வைத்தே இராவணனை தமிழ் மக்கள் வெறுக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. உண்மையில் இராவணன் கர்வம் பிடித்தவனா? இரக்கம் என்பது எள்ளளவும் இல்லாதவனா? துஷ்டனா? பெண் பித்தனா? இவற்றை பின்பு ஆராய்ந்து பார்க்கலாம்.

இலங்கை உட்பட தமிழர்களின் தாயகம் என்றழைக்கப்படும் குமரி நாட்டின் பல பகுதிகளை ஆண்ட சிவபக்தன் இராவணனை தமிழர்கள் வெறுப்பதற்கு இவைதானா உண்மையான காரணங்கள்? இல்லை. எமக்குள் இருக்கும் உதாசீனப் போக்கு, வரலாற்றுப் பழமையை புறந்தள்ளி ஒதுக்கிவிடும் உதாசீனம். அசட்டுத் துணிவினால் எனையவர்களை குறைத்து மதிப்பிடும் உதாசீனம். வறட்டு கௌரவம் காட்டி யதார்த்தத்தை உணராமல் இருக்கும் உதாசீனம். 

எமக்கு எல்லாம் தெரியும் எனப் பேசிப் பேசியே உண்மையை ஆராய்ந்து பார்க்காமல் விட்டு விடும் உதாசீனம். ஒன்றை மட்டும் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு ஏனைய முக்கிய துருப்புச் சீட்டைப் பறிகொடுக்கும் உதாசீனம். இந்த அடிப்படையில் அண்மைக் காலமாக தமிழர்கள் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் துருப்புச்சீட்டு தான் இராவணன்.

உதாசீனப் போக்கால் தமிழர்கள் பறிகொடுத்த அடையாளச் சின்னங்கள்

தமிழர்களின் உதாசீனப் போக்கால் நாம் பறிகொடுத்த எம் பாரம் பரிய மிக்க அடையாளச் சின்னங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமாக சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

பல்லாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இராவணன் காலத்துடன் தொடர்புடைய திருக்கேதீஸ்வரத் திருத்தலம் இலங்கைத் தமிழர்களின் முக்கிய அடையாளச் சின்னமாகும். இது இராவணனும், இராமனும் வழிபட்ட சிவத்தலமாகும். திருக்கேதீஸ்வரத்துக்கு அருகில் இந்துக் களின் முக்கிய அடையாளச் சின்னமாக தலைமன்னாரில் உள்ள இராமர் பாலம் என்றழைக்கப்படும் சேதுக்கரை விளங்குகிறது. 

இராமர் பாலத்தின் அக்கரையில் இராமர் வணங்கிய இராமேஸ்வரமும், அனுமன் வணங்கிய கோதண்டராமர் கோயிலும் அமைந்துள்ளன. இராமர் பாலத்தின் இக்கரையில் தலைமன்னாரில் இந்துக்களின் அடையாளச் சின்னமாக என்ன இருக்கிறது? பாலத்தை வெற்றிகரமாகக் கட்டி முடித்து இக்கரைக்கு வந்த அனுமன் இராமரை வழிபட்டான். இராமர் சிவனை வழிபட்டார். இவர்கள் வழிபட்ட இராமர் கோயிலோ, சிவன் கோயிலோ தலைமன்னாரில் சேதுக்கரையில் காணப்படவில்லையே! 


இராமர் சிவனை வழிபட்ட, இலங்கையின் சேதுக்கரையில் சோழர் காலத்தில் திருவிராமேஸ்வரம் எனும் சிவாலயம் கட்டப்பட்டது. திருக்கேதீஸ்வரத்தையும், திருவிராமேஸ்வரத்தையும் பின்பு போர்த்துக் கேயர் இடித்தளித்தனர். சேதக்கரையிலிருந்து 25 மைல் தூரத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத்தை மீளமைப்பதிலும், பேணிப்பாதுகாப் பதிலும் நாம் காட்டிய அக்கறையை ஏன் சேதுக்கரையில் அமைந் திருந்து அழிக்கப்பட்ட திருவிராமேஸ்வரத்தை மீள அமைப்பதில் காட்டவில்லை? இவ்விடத்தில் இந்துக்களுக்கு பல்லாயிரம் வருட பாரம்பரியம் இருந்தும் எமது அடையாளச் சின்னம் எதுவும் இங்கு காணப்படவில்லையே? திருக்கேதீஸ்வரத்தைக் கட்டிய பின்பாவது திருவிராமேஸ்வரத்தைக் கட்டியெழுப்பியிருந்தால் நாம் சேதுக்கரையை பறிகொடுத்திருக்க மாட்டோமல்லவா?

அடுத்தது கன்னியா எனும் சிவத்தலம். அகத்திய மாமுனிவரின் மனம் கவர்ந்த திருத்தலம். அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் இருந்த இடம். இச்சிவலிங்கத்தை வணங்கி இராவணன் தனது தாயின் இறுதிக் கிரிகைகளைச் செய்த இடம். இங்கிருந்து சிறிது தூரத்தில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது.

திருக்கேதீஸ்வரத்தைப் போலவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இராவணனின் காலத்துடன் தொடர்புடைய திருக்கோணேஸ்வரம் இலங்கைத் தமிழர்களின் முக்கிய அடையாளச் சின்னமாக விளங்கு கிறது. இது இராவணன் வழிபட்ட சிவத்தலமாகும். 

திருக்கோணேஸ் வரத்தைப் பேணிப்பாதுகாப்பதிலும், கட்டியெழுப்புவதிலும் தமிழர்கள் காட்டிய அக்கறையை இராவணனுடன் முக்கிய தொடர்புடைய கன்னியாவில் ஏன் காட்டவில்லை? ஆரம்பகாலம் முதற்கொண்டு கன்னியாவில் ஓர் சிவாலயத்தை அமைத்திருந்தால் அவ்வரலாற்றுச் சின்னத்தை நாம் பறிகொடுத்திருக்க மாட்டோமல்லவா?

எனவே நாம் பறிகொடுத்த முதலாவது முக்கிய அடையாளச் சின்னம் சேதுக்கரையில் இருந்த திருவிராமேஸ்வரம். இரண்டாவது திரிகூடகிரியின் அருகிலுள்ள கன்னியா. மூன்றாவதாக நாம் இழந்து கொண்டிருப்பது இராவணன் எனும் எமது பாரம்பரிய அடையாளச் சின்னம். எனவே இவற்றிற்கெல்லாம் மூல காரணம் மேற்சொன்ன உதாசீனப் போக்கு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இராவணன் பற்றி மக்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைகள்

பண்டைய இலங்கை உட்பட, இலங்கை அமைந்திருந்த குமரி நாட்டில் சிவவழிபாட்டையும், சிவாலயங்களையும் தோற்றுவித்த இலங்காபுரிச் சக்கரவர்த்தியான மாமன்னன் இராவணன் பற்றிய பல சர்ச்சைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.

உண்மையில் இராவணன் என்பவன் யார்? இவனது குலம் என்ன? இராவணன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்? இவன் பேசிய மொழி என்ன? உண்மையில் இராவணனின் பரம்பரை என்ன? இவனது சந்ததிகள் யார்? இராவணன் எந்தெந்த பிரதேசங்களை ஆட்சி செய்தான்? இராவணன் பல்கலை வல்லவனா? அப்படியானால் என்னென்ன கலைகளில் தேர்ச்சி பெற்றவன்?

இராவணன் ஆட்சி செய்த லங்காபுரி எங்கு அமைந்திருந்தது? தென்னிந்திய பகுதியிலா அல்லது வட இந்திய பகுதியிலா? இராவணன் ஆட்சி செய்த காலம் என்ன? இராமாயண சம்பவங்கள் இலங்கையில் நிகழ்ந்தது எப்போது?

உண்மையில் இராவணனுக்கு பத்துத் தலைகளும், இருபது கைகளும் இருந்தனவா? இராவணன் ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை உண்மையில் பயன்படுத்தினானா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புஸ்பக விமானம் என்றொரு ஆகாய ஊர்தி இருந்ததா?

இராவணனின் வல்லமை என்ன? உண்மையில் இராவணன் ஆணவம் பிடித்தவனா? சீதையை கவர்ந்து வந்ததினால் தான் வரலாற்றில் துஷ்டனாக்கப்பட்டான் என்பது உண்மையா? இராவணன் அரக்கனா? அல்லது மனிதனா? இராவணன் சீதையை வைத்திருந்த இடம் எது?

லங்காபுரியில் இராவணன் 1008 சிவலிங்கங்களை ஸ்தாபித்தானா? அப்படியானால் இராவணன் ஸ்தாபித்த சிவலிங்கங்கள் எங்குள்ளன? இராவணனின் விமானத் தளங்கள் இருப்பது உண்மையா? இலங்கை யெங்கும் இராவணனின் சுரங்கப்பாதைகள் இருப்பதாகச் சொல்லப் படுவது உண்மையா? இராவணன் பயன்படுத்திய குகைகள் இருப்பது உண்மையா? இவனது கோட்டைகள், மாளிகைகள் இருந்தனவா? இராவணனின் நகரங்கள் இருந்தனவா?

இராவணனை மக்கள் கடவுளாக வழிபட்டனரா? இராவணனின் உடல் இன்னும் இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா? இராவணன் பற்றி இலங்கை மக்கள் கூறிவரும் ஐதீகங் களும், கர்ணபரம்பரைக் கதைகளும் உண்மையானவையா?

இப்படிப்பட்ட ஏராளமான சர்ச்சைகள் இராவணன் பற்றியும், இராமாயணம் பற்றியும் மக்களிடையே நிலவுகின்றன. இவை பற்றிய உண்மைகளை இனி ஆராய்ந்து பார்க்கலாம்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
nksthiru@gmail.com

No comments: