இராவணனின் உண்மை வரலாறு பகுதி-1


என்.கே.எஸ்.திருச்செல்வம்
 2020.06.06


குறிப்பு:  

வரலாற்று கட்டுரையின் முழு அதிகாரங்களும் என்.கே.எஸ் திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர் அவர்களையே சாரும் இதனை வேறு தளங்களில் அனுமதியின்றி பதிவிடுவது குற்றமாகும் 

இராவணனும், இராமாயணமும் -ஓர் அறிமுகம்

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட ஆதிகாலத்தில் இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்ததாக நூல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. கந்தபுராணம், தக்ஷிண கைலாய புராணம் ஆகிய நூல்களின் படி சூரனின் மீதான கந்தனின் போர் இலங்கையில் நடந்த முதலாவது வரலாற்று நிகழ்வாகும். அதன் பின்பு இலங்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக இராமாயணப் போர் கருதப்படுகிறது. இலங்கை வேந்தன் இராவணனுக்கும், வடஇந்தியாவிலிருந்து வந்த இராமனுக்கும் இலங்கையில் போர் நிகழ்ந்ததாக இந்தியாவின் புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணம் கூறுகிறது.

இராமாயண சம்பவங்களுக்கு சரித்திரப் பின்னணி உள்ளதா?

இராமாயணம் வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ஓர் இதிகாசம் எனவும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் யாவும் புலவர் களின் கற்பனைப் படைப்புகள் எனவும், இதில் கூறப்பட்டுள்ள சம்ப வங்கள் அனைத்தும் கவிஞர்களின் கற்பனைக் கதைகள் எனவும், இராமாயண காவியத்திற்கு சரித்திரப் பின்னணி எதுவும் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அண்மைக்கால ஆய்வுகளின்படி இராமாயண சம்ப வங்களுக்கு வரலாற்றுப் பின்னணி உள்ளது என்றும், இதன் கதாபாத்திரங்கள் உண்மையானவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், அதன் பின்பு மக்களால் வழிவழியாக, பரம்பரை பரம்பரையாக இவை பேசப்பட்டு வந்ததாகவும், மக்களால் வழங்கப்பட்டு வந்த இச்சம்பவங்களைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டளவில் வால்மீகி முனிவர் இதை ஓர் காவியமாக எழுதினார் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும், இலங்கையிலும் நிகழ்ந்த சில சம்பவங்களை மக்கள் வழிவழியாகப் பேசி வந்துள்ளனர். இச்சம்பவங்களை ஒன்று திரட்டி, தொகுத்து 10,000 பாடல்கள் கொண்ட ஓர் நூலாக வால்மீகி எழுதியுள்ளார். 

இன்று நாம் வாசிக்கும் இராமாயணத்தில் பின்பு சேர்க்கப்பட்ட 14,000 பாடல்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஓர் தொடர்ச்சியான மூலக்கதை கிடைக்கும். இக்கதையையே பரம்பரை பரம்பரையாக மக்கள் பேசி வந்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் இராமாயணக் கதையின் சில குறிப்புகள் காணப்படுகின்றன.

எனவே மக்கள் கர்ண பரம்பரையாகப் பேசி வந்த இக்கதைக்கு முன்னோடியாக இந்தியாவிலும், இலங்கையிலும் சில வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

இச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து மக்கள் வழிவழியாகப் பேசி வரும் போது காலத்துக்குக் காலம் சில கற்பனைக் கதைகளும், மிகைப்படுத்தல்களும் இக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இக்கதைகளைக் கேட்டு, தொகுத்து எழுதிய புலவர்களும் மேலும் சில கற்பனைக் கதைகளைப் புகுத்தி எழுதியதன் பின் இன்று நாம் காணும் இராமாயணம் உருவாகியுள்ளது. எனினும் இவை யாவற்றிற்கும் அடிப்படை வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இலங்கையில் இராவணன் மற்றும் இராமாயணம் தொடர்பான ஆய்வு முயற்சிகள்

அண்மைக்கால ஆய்வுகளின் போது இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான இலங்கை மன்னன் இராவணன் தொடர்பான கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவை இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் இலங்கையில் 2000 வருடங்களுக்கு முன்பு பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளும், தென்னிந்தியாவில் பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட செப்பேடுகளும் மிக முக்கியமானவையாகும்.

மேலும் இலங்கையில் அண்மைக்காலமாக ஆய்வு செய்யப்பட்டு கண்டறியப்பட்ட சில இடங்களுக்கும், இராமாயணத்திற்கும் தொடர்புகள் உள்ளன. இவற்றின் மூலம் இராமாயண கதாபாத்திரங் களும், அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களும் உண்மையானவை எனக் கூறக்கூடியதாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையில் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் இராவணன் பற்றியும், இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை வட இந்திய அமைப்பொன்றின் துணையுடனும், இலங்கையிலுள்ள அறிஞர்கள் சிலரின் ஆதரவுடனும் இராவணன் மற்றும் இராமாயணம் தொடர்பான 50 இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு அவை பற்றிய விபரங்களுடன் காணொளிக் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக வடஇந்திய உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் இக்காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் பல இடங்கள் அந்தந்த இடங்களில் வசிக்கும் மக்களிடையே இராமாயணம் தொடர்பாக நிலவும் ஐதீகங்களின் அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. 

இவ்விடங்களில் இராமாயண காலத்துடன் தொடர்பில்லாத சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இராமாயணம் மற்றும் இராவணன் தொடர்பான சில முக்கிய இடங்கள் விடுபட்டுள்ளன. குறிப்பாக பிராமிக் கல்வெட்டுக்கள், திருவிராமேஸ்வரம் போன்றவை விடுபட்டுள்ளன.

இராவணன் பற்றி இலங்கையில் நிலவும் ஐதீகங்கள்

இராமாயண காலத்துடன் தொடர்புடைய இலங்கையின் மாமன்னன் இராவணனைப் பற்றிய ஐதீகங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இராவணனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பல ஐதீகங்களும், கர்ணபரம்பரைக் கதைகளும் நிலவுகின்றன. இப் பகுதியிலுள்ள மக்கள் இராவணன் என்றோர் மன்னன் இங்கு வாழ்ந்ததாகவும், அவனின் மாளிகைகள், நகரங்கள், குகைகள், சுரங்கப் பாதைகள், விமானத்தளங்கள் போன்றவை இப்பகுதியில் இருந்ததாகவும் உறுதியாக நம்புகின்றனர்.

இராவணனைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு இராமாயணத்தைவிட இலங்கை மக்களிடையே பேசப்படும் ஐதீகங்களும், அவை தொடர்பான இடங்களும், தடயங்களுமே மிக முக்கியமானதாக உள்ளன. 

இதன் காரணமாகவே இராமாயணத்தை நன்கு அலசி ஆராய்ந்த இந்திய அறிஞர்களும், ஆய்வாளர்களும் இராவணன் ஆட்சி செய்த இலங்கைக்கு வந்து இராமாயணத்தின் தடயங்களையும், இராவணனின் சுவடுகளையும் தேடுகின்றனர்.

இலங்கையில் சிவவழிபாட்டைத் தோற்றுவித்த இராவணனை மறந்த தமிழர்கள்

இராவணன் பற்றி இராமாயணத்தில் சொல்லப்படாத பல விடயங் களும், உண்மைத் தகவல்களும் இலங்கைத் தீவில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ள சிங்கள அறிஞர்களும், ஆய்வாளர்களும் மற்றும் வட இந்திய ஆய்வாளர் களும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

அதே சமயம் சிவ பக்தனான இராவணனைப் பற்றி சிவ வழிபாட்டில் அதீத ஈடுபாடு கொண்ட இலங்கை மற்றும் தென்னிந்தியத் தமிழ் மக்கள் இந்த அளவிற்கு ஆராயவும் இல்லை, இராவணன் பற்றி தெரிந்து கொள்ள அக்கறை கொள்ளவுமில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

நாம் எல்லோரும் சைவர்கள் எனவும், சிவ பக்தர்கள் எனவும், இலங்கை ஓர் சிவபூமி எனவும் பெருமையாகக் கூறும் இலங்கைத் தமிழ் மக்கள், இப்பூமியை சிவபூமி என குறிப்பிடும் அளவிற்கு சிவாலயங்கள் நிறைந்த பூமியாக உருவாக்கிய இலங்காபுரிச் சக்கரவர்த்தியான இராவணனை ஏனோ மறந்துவிட்டனர்.

இலங்கை இந்துக்களின் பண்டைய அடையாளச் சின்னமாகவும், சரித்திர நாயகனாகவும் திகழ்ந்த இராவணனை நாம் மறந்தது ஏன்? இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு சுமார் 4500 வருடங்களுக்கு முன்பு இந்நாட்டில் சிவழிபாட்டை மேலோங்கச் செய்திருந்த அச்சிவபக்தன் மீது அப்படி என்ன கோபம்? இந்த அளவுக்கு இராவணனை வெறுப்பதற்கு அவன் செய்த மகாபாதகம் என்ன?

தொடரும்...

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
nksthiru@gmail.com

1 comment:

  1. திருக்கோணேஸ்வர ஆலயத்தின் ஸ்தல புராணம் அந்தக் கோயில் 12000 வருடங்கள் பழமையானது என்று கூறுகிறதே அதனை ஆர்தர் சி கிளார்க் அவர்களும் ஆய்வு செய்துள்ளார்கள்.....

    ReplyDelete