கல்முனை உவெஸ்லிக்கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக்க வேண்டாம் -ராஜன்


(காரைதீவு நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த கல்முனைப்பிரதேசத்தின்
இதயத்திலிருக்கக்கூடிய கல்முனை உவெஸ்லி உயர்தரக் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றவேண்டாம்.

இவ்வாறு கல்முனை மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோளில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

கிழக்கில் 11பாடசாலைகள் தனிமைப்படுத்தல்நிலையங்களாக மாற்றப்படுகின்றன. அவற்றுள் கல்முனை உவெஸ்லிக்கல்லூரியும் ஒன்றாகும் என அறியக்கிடைத்தது.
கல்முனை மாநகரின்மத்தியில் மூவினமாணவர்களும் கல்விபயிலும் பாரம்பரியமான உவெஸ்லி உயர்தரக்கல்லூரி ஜனசந்தடிமிக்க பகுதியிலமைந்துள்ளது.
இப்பாடசாலையைச்சுற்றி கல்முனை பிரதான சந்தை தேவாலயம் பெண்கள்காப்பகம் மைதானம் கடைத்தொகுதி கடைத்தெரு பொலிஸ்நிலையம் மாநகரசபை பிரதேசசெயலகம் போன்ற முக்கியமான இடங்கள அமைந்துள்ளன.

எந்நேரமும் மக்களால் நிரம்பிவழிகின்ற பகுதியிலமைந்துள்ள இப்பாடசாலையை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதென்பது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
உண்மையில் அரசாங்கம் கொரோனாத்தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்கொண்டுவருகிறது. அதற்கு எமது பாராட்டைத்தெரிவிக்கிறேன்.

அதேவேளை பாடசாலைகளை இந்தநோக்கத்திற்காக எடுக்கமாட்டோம் என இராணுவத்தளபதி கல்வியமைச்சர் ஆகியோர் ஏலவே ஊடகங்களில் கூறியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

இக்கல்லூரியில் இராணுவவீராகள் சமுக இடைவெளியைப் பேணுவதில் சிரமமுள்ளது. வருங்கால சந்ததிகள் பயில்கின்ற இப்பாடசாலையில் கொரோனா தொடர்புடைய நிலையங்களை அமைப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

No comments: