துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை மீட்போம் !


துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை மீட்போம்  !

எமது நாட்டில் அதிகமாக இடம்பெறுகின்ற குற்றங்கள் “போதைப்பாவனை” மற்றும் “சிறுவர் துஷ்பிரயோகம்” ஆகும்.

இதற்காக, இந்நாட்டு பிரஜைகளாக நாம் எல்லோரும் வெட்கித் தலைகுணிய வேண்டும். இப்பொழுது ஒரு கேள்வி சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவதா? இல்லை நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களை காப்பாற்றுவதா?. 

என்னுடைய பதின்மவயதுகளில் என் கண்களால் சிறுவர்கள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதை பார்த்திருக்கிறேன். அந்நேரத்தில் இவை பற்றி எனக்கும் தெளிவூட்டல் இன்மையினால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனே இக்கட்டுரையை எழுதுகிறேன்.


சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன?


சிறுவர்களை உடல், உள, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தல் புறக்கணித்தல், சிறுவர் தொழிலாளர்கள், சிறுவர் திருமணம், பாலியல் துஷ்பிரயோக சாதனங்களுக்காக பயன்படுத்தல் மற்றும் தவறான இணையத்தள பாவனை, தவறான, பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுத்தல் போன்றவை துஷ்பிரயோகங்களில் அடங்கும். அறியாதவர்கள், நண்பர்கள், குடும்ப உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் போன்ற எவராலும் எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகலாம். எனவே, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் எவை?


உடல் சார்ந்த துஷ்பிரயோகம், போதிய உணவு வழங்காமை, தேவைகளை பூர்த்தி செய்யாமை, போசாக்கின்மை, உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், மனதறிய போதையூட்டலும், நஞ்சூட்டலும், வைத்திய சிகிச்சையை மறுத்தல், கல்வி பெற வாய்ப்பளிக்காமை, பிள்ளையை பற்றிப் பொய் கூறல், உடல் உள ரீதியான இம்சை, சட்ட விரோதமாகச் சிறுவரை வேலைக்கு அமர்த்தல், சிறுவர் ஊழியம், பிள்ளைகளைக் கொலை செய்தல், கைவிடல், விற்றல், கடத்தல், பாலியல் தொழிலாளியாக்கல், பிள்ளைகளை போரில் இணைத்தல், பிள்ளைகளைப் பிச்சையெடுக்கவிடல் (தண்டனைக்குரிய குற்றமாகும்), போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவிக்க தூண்டுதல், பாலியல் சார்ந்த படங்களைப் பார்க்க வைத்தல் மற்றும் பிள்ளைகளை மற்றவர்களோடு, ஒப்பிட்டு தாழ்த்தி பேசுதல். இப்படிப் பல துஷ்பிரயோகங்கள் உண்டு.

பொலிஸ்பதிவுகளின் படி கடந்த 2009 – 2012 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு 21,458 ஆகும். உலகளாவிய ரீதியில் சுமார் பதினெட்டு இலட்சம் வரையிலான சிறுவர்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இலங்கையின் நிலை


இலங்கையில் நாளாந்தம் 4-6 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவை பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மாத்திரமே பதிவு செய்யப்படாதவை பலமடங்கு இடம்பெறுகின்றன.

முப்பதாயிரம் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடந்தகாலங்களில் நாம் பல சிறுவர் துஷ்பிரயோகங்கள் கண்ணுக்கு முன்னர் நடப்பதை பார்த்தும் அதற்காக தீர்வை தேடாது விட்டிருப்போம். சிறுவர்களே நாட்டினது கண்கள் அவர்களை பேணிப்பாதுகாப்பது எமது கடமை என்பதை வாய்ப்பேச்சில் வைத்துக் கொண்டு. 

நான் பார்த்த சில சிறுவர் துஷ்பிரயோகங்கள், முகாம் ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு சிகரெட் பத்த வைத்து அதனை பெரியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவும் சிறுவர் துஷ்பிரயோகங்களே இவற்றை கண்டால் முறைப்பாடு செய்யுங்கள். 


கடற்கரை பகுதியில் ஒரு வாகனத்தில் நின்ற இரண்டு வயது சிறுவனை ஒரு நடுத்தர இளைஞன் முப்பது வயது இருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். அந்த சிறுவனுக்கு அது சம்பந்தமாக எந்த அறிவும் அற்ற நிலையில் அசையாது நின்றான். இந்த சம்பவம் யுத்தகால இடம்பெயர்வில் இடம்பெற்றது.

உளரீதியாகவும் உடல்பாகங்கள் செயற்படாமலும் தான் யார் என்றே அறியாத மனநோயாளியாக காணப்பட்ட பதின்மவயது சிறுவன் கால்கள் தடி அளவில் மெலிந்து காணப்பட்டான். பதின்ம வயது சிறுவனை அவனது பெற்றோர் ஆடையின்றி வீட்டில் வைத்திருந்தது மாத்திரமன்றி பெற்றோர்கள் அவனை சரியாக கவனிப்பதில்லை.


சில நேரங்களில் அடி விழும், அவன் அழுவதை பார்க்க பாவமாக இருக்கும். அந்த பையன் இறந்தாலும் பரவாயில்லை இப்படி துன்பப்படுவதற்கு என்று எல்லோரும் சொல்வார்கள். அதே நேரம் பத்து வயது மதிக்கத்தக்க அவனது சகோதரி அவளும் சிறுமியே அவளே அந்த சிறுவனை அன்போடு கவனித்து வந்தாள். அவனை குளிக்க வைப்பது மலசலகூடம் கழிக்க விடுவது ஆடை மாற்றுவது போன்ற அத்தகைய வேலைகளையும் அவளே கவனித்து வந்தாள். 

அந்த நேரத்தில் நானும் பதின்ம வயதில் இருந்ததால் என்னாலும் அந்த நேரம் அவ்விருவருக்கும் எந்த உதவியையும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக என்னால் இவர்களைப் போன்ற பாதிக்கப்படும் சிறார்களுக்கு தீர்வை பெற்று தர முடியும். 


இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, இணையத்தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றால் கீழ்காணும் நிறுவனங்களுக்கு அறிவியுங்கள்.

1. இணைய குற்றவியல் விசாரணை திணைக்களம் :0112691982.

2. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை :1929.

3. SLCERT: 0112691692, slcert@slcert.gov. lk.

4. Peace பீஸ் அமைப்பு : 0112819397/0712733037 report@ecpatsrilanka.org.

இவ்வாறான நிறுவனங்கள் உங்களுக்கான தீர்வுகளை பெற்று தரும் அதேவேளை சட்டரீதியாக பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடவும் முடியும். சிறுவர் முறைகேடாக நடாத்தப்படுவதிலிருந்தும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்தும் இழிவுபடுத்துவதிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிமையுண்டு என 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (International covenant on civil and Political Rights Act, No.56 of 2007) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கம்: பிரியா நடேசன்
(K2TAMIL) எழுத்தாளர்


No comments: