எம்.எஸ்.கே.றகுமானின் கல்விச் சேவைகள் ஒரு பார்வை. !


(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான் தனது முப்பத்தெட்டு வருட கல்விச் சேவையிலிருந்து கடந்த 24.04.2020 ஓய்வு பெற்றுள்ளார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முகம்மது சுலைமான், சித்தி நபீஸா தம்பதிகளின் மகனாக 1960ம் ஆண்டு 4ம் மாதம் 27ம் திகதி பிறந்த இவர், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்விகளைக் கற்று உயர் தரக் கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கற்றார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியை ஐனுல் றிபாயா என்பவரை திருமணம் முடித்துள்ள இவர், இலங்கை ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை மூலம் 1982ம் ஆண்டு 4ம் மாதம் 21ம் திகதி ஆசிரியர் நியமனத்தைப் பெற்றார்.

இவர் ஆரம்பக் கல்வியைக் கற்ற வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலேயே முதல் நியமனம் கிடைத்தது. அங்கு பத்து வருடங்கள் ஆசிரியராகவும், எட்டு வருடங்கள் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் க.பொ.த.உயர் தர கலை, வர்த்தக அனுமதி பெறுவதற்கு பாடசாலையின் அதிபர், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் உதவியுடன் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு அனுமதி கிடைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கினார்.

குறித்த பாடசாலையில் உயர் தர கல்வி நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடைத்த காலத்திலிருந்து 2000ம் ஆண்டு வரை க.பொ.த.உயர் தர வகுப்பில் அரசியல் பாடம் கற்பித்தார்.

பாடசாலையில் ஏற்பட்ட வளப்பற்றாக்குறையை கவனத்திற் கொண்ட இவர், அப்போதைய அதிபராக கடமையாற்றிய மர்ஹும் கோட்டமுனை இஸ்மாயில் அவர்களின் காலத்தில் பாடசாலைக்கு காணி பெறுவதற்காக தற்போது ஒய்வு பெற்றுள்ள அதிபர் யூ. அஹமட் அவர்களுடன் இணைந்து பாரிய முயற்சிகளைச் செய்து மாணவர்கள், பெற்றோர்களின் பங்களிப்புடன் காணியைப் பெற்றுக் கொடுத்தார். தற்போது இயங்கி வரும் கேட்போர் கூடம் இவ்வாறு பெற்ற காணியிலேயே கட்டப்பட்டுள்ளது.

இவர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்ததுடன், பிரதி அதிபராக இருந்த காலத்தில் பதவி வகித்த சகல அதிபர்களுக்கும் துணையாக செயற்பட்டார்.

அத்தோடு அதிபர் தரம் உள்ளவர்கள் பாடசாலையில் கடமையாற்றிய காலத்தில் அதிபர் தரம் இல்லாத இவர் பிரதி அதிபராக தொழிற்பட்டமை இவரின் திறமையின் வெளிப்பாடாக இருந்தது.

அத்தோடு 2000ம் ஆண்டு 3ம் மாதம் 1ம் திகதி தொடக்கம் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கல்குடா கல்வி வலயத்தில் இணைந்து 2007ம் ஆண்டு 12ம் மாதம் 31ம் திகதி வரை அங்கு கடமையாற்றினார்.

அதைத் தொடர்ந்து 2008.01.01 தொடக்கம் உதவிக் கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கடமையாற்றியதோடு அதே ஆண்டில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கடமையுடன் கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் சுமார் இரண்டு வருடங்கள் கடமையாற்றினார்.

சமூக சேவைகள் புரிவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக சேவையாற்றியதோடு, வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையில் சுமார் ஆறு ஆண்டுகள் செயற்பட்டுள்ளார்.

அத்தோடு இவர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவராகவும், செயலாளராகாவும் கடந்த காலங்களில் சேவையாற்றியதோடு, வாழைச்சேனை கூட்டுறவுச் சங்க இயக்குனராக ஆறு ஆண்டுகள் செயற்பட்டுள்ளார்.

சக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகும் இவர், கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றாலும் இவருக்கான கௌரவம் என்றும் அனைவரிடமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments: