அம்பாறை மாவட்டத்தில் நீரின்றி கருகும் வேளாண்மை - விவசாயிகள் கவலை !


(வி.சுகிர்தகுமார்) 


அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவைத் திணைக்களத்திற்குட்பட்ட நீத்தையாறு தென்கண்டத்தில் மேற்கொள்ளபட்ட 650 ஏக்கர் நெற்காணி மற்றும் தோணிக்கல்மேல், நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவான வேளாண்மை செய்கையும் நீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்களும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர்.

அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்ற நிலையில் இவருட சிறுபோகச் செய்கையின் பொருட்டு அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளராலும் அனுமதியளிக்கப்பட்ட இக்காணிகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


பன்னலகம நீர்த்தேக்க நீர்ப்பாசனத்தினை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் குறித்த விவசாய நிலங்களுக்கு கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நீர்ப்பாசனம் வழங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆயினும் இவ்வாண்டில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆரம்ப கூட்ட தீர்மானத்தின்படி விதைப்பிற்கான முதலாவது நீர் வழங்கப்பட்டதாகவும் அதனை பயன்படுத்தி நெற் செய்கையினை மேற்கொண்டதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

ஆயினும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நெற்செய்கை மேற்கொண்டு 25 நாட்கள் கடந்த நிலையில் இரண்டவாதாக வழங்கவேண்டிய முளைத்தண்ணீரோ மூன்றாவதாக வழங்க வேண்டிய பசளைக்கான நீரோ வழங்கப்படவில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் செத்துமடியும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.


இதேநேரம் கௌரவ ஜனாதிபதி அவர்கள் அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு வடகிழக்கு மாகாணங்களை அதிக நெல் விளைச்சலை பெறும் மாகாணங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார். அப்படியான அறிக்கைகளை அவர் விடுத்தும் அனுமதியளிக்கப்பட்ட நிலங்களுக்கு கூட தற்போது நீர் வழங்கப்படவில்லை. அத்தோடு பசளை மானியமும் முழுமையாக கிடைக்கவ்pல்லை. ஆகவே ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து உரிய அதிகாரிகளின் பணிப்புரை விடுத்து விவசாயிகளை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ஏக்கருக்கு தலா 50ஆயிரம் ரூபா வரையில் இதுவரையில் செலவு செய்துள்ள விவசாய நிலங்கள் நீரின்றி வரட்சியினால் வெடிப்புற்ற நிலையில் காணப்படுவதுடன் பயிர்களும் கருகி வருகின்றமை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க அதிகளாவன நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய செய்கைக்கு நீரை வழங்குவதற்கான அதிகாரத்தை அரசாங்கமும் அரச அதிகாரிகளுமே கொண்டிருக்கும் நிலையில் பன்னலகம நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை வழங்கும் அதிகாரம் பன்னலகம நீர்த்தேக்கம் அமைந்துள்ள பிரதேசத்தில் வாழும் விவசாய அமைப்புக்களிடமே தங்கியுள்ளமை பொருத்தமற்ற செயற்பாடு என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.




No comments: